சட்டப்பேரவை, பொதுமேடைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா இடங்களிலும், மனதில் பட்டதை வெள்ளந்தியாகப் பேசி, கலகலப்பை ஏற்படுத்தி, அனைவரையும் கவரும் இயல்பு கொண்டவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அளித்த பேட்டியிலிருந்து…
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதே..?
வாக்காளர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகம் இது. தொகுதி வாரியாக நடந்த எஸ்ஐஆர் கூட்டத்தில், திமுக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் இக்கூட்டத்தை புறக்கணித்திருக்க வேண்டியதுதானே… இப்பிரச்சினையை எழுப்புவதன் மூலம் பிரதமர் மோடிஜிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு உணர்வை உருவாக்கலாம் என்று பார்க்கின்றனர்.
திமுக-விடமிருந்து, தமிழகத்தை மீட்டு மக்களாட்சி அமைப்போம் என்கிறாரே விஜய்?
அவர் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர், அவர்களது தொண்டர்களை, உற்சாகப்படுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் அப்படித்தான் பேசுவார். பனையூரிலிருந்து அறிக்கை கொடுப்பதோடு, மக்களைச் சந்தித்து, அவர்களது உணர்வுகளையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
கரூர் சம்பவத்தை வைத்து தவெக-வுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறதா?
எம்ஜிஆர் அதிமுக-வை ஆரம்பித்தபோது, தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பல வழக்குகளைப் போட்டு கலைஞர் அடக்கப் பார்த்தார். ஆனால், தொண்டர்களும், மக்களும் எம்ஜிஆர் பின்னால் அணி திரண்டு நின்றனர். அடக்குமுறைகளை மீறி அதிமுக வளர்ந்தது. இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், விஜய் கட்சிக்கு நெருக்கடி என்று ஒன்றும் இல்லை. ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், தவெக-வே இருக்காது.
விஜய் சினிமாவில் நடிக்கப் போய்விடுவார். தியேட்டர்கள் எல்லாம் அவர்கள் (திமுக) கையில் இருப்பதால், அதுவும் முடியுமா என்று தெரியவில்லை. எனவே, தமிழக மக்கள் நலனுக்காகவும், என்னை நம்பி வந்த தொண்டர்கள் நலனுக்காவும் மத்திய அரசுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுகிறேன் என கடந்த காலங்களில் எம்ஜிஆர் முடிவெடுத்து செயல்பட்டதை விஜய் நினைவில் கொள்ள வேண்டும்.
