தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டியானது டிராவில் முடிவடைந்தது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் சதம் விளாசினார். இதில் இந்திரஜித் 149 ரன்களையும், ஆண்ட்ரே சித்தார்த் 121 ரன்களையும் சேர்க்க, அடுத்து வந்த அஜித்தேஷ் குருஸ்வாமி 86 ரன்களையும் சேர்த்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யுபி அணியில் ரிங்கு சிங் சதம் விளாசி மிரட்டியதுடன், 176 ரன்களையும் சேர்த்து அசத்தினார். மேற்கொண்டு கோஸ்வாமி 79 ரன்களையும், ஷிவம் மாவி 54 ரன்களையும் சேர்க்க யுபி அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு தரப்பில் வித்யுத் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 5 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரர்கள் பாலசுப்பிரமணியம் சித்தார்த் 59 ரன்களையும், ஜெகதீசன் 44 ரன்களையும் சேர்க்க, தமிழ்நாடு அணி 103 ரன்களை எடுத்திருந்த போது நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு – உத்திரபிரதேசம் இடையிலான இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் யுபி அணி முன்னிலை பெற்றிருந்ததன் காரணமாக அந்த அணிக்கு 3 புள்ளிகளும், தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் உத்திரபிரதேச அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, மூன்று டிரா என மொத்தமாக 17 புள்ளிகளை கைப்பற்றி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அணி ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் 7 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடரில், தமிழ்நாடு அணி ஒடிசா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அணி நடப்பு சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், எஞ்சிய ஆட்டங்களில் ஆறுதல் வெற்றியையாவது பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
