பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா நடத்தி வரும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டு ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ரூ.7.5 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது.
இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா அனுமதி வழங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்தநிலையில், ராபர்ட் வதேராவின் நிறுவனம், டிஎல்எப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு நிலத்தை விற்றது. கட்டுமான உரிமத்தையும் அந்நிறுவனத்துக்கே வழங்கியது.
இந்தநிலையில், நில விற்பனையில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அதனடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் வத்ரா அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 2009ம் ஆண்டு ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரி, ராபர்ட் வத்ராவின் அறிவுறுத்தலின் பேரில், அவர் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை புனரமைத்தார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை ராபர்ட் வத்ரா மறுத்திருந்தார். கடந்த 2023ல் சஞ்சய் பந்தாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பண மோசடி தொடர்பாக ராபர்ட் வத்ரா மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது டிசம்பர் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.
