சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் உள்ள போதும், மன ரீதியாக அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அவரது சகோதரி உஸ்மா கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73), பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சி நடத்தி வருகிறார். 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதனையடுத்த இம்ரான் கான் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் முதல் பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்குகளில் கடந்த 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள அவர், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்று இம்ரான் கான் குடும்பத்தினர் கூறி வந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த சிறை நிர்வாகம், இம்ரான் சகோதரிகளில் ஒருவரான உஸ்மா கானுக்கு அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், சிறையில் இம்ரான் கான் உயிருடன் இருப்பதாக உஸ்மான் கான் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கு மன ரீதியான சித்ரவதைகள் தரப்படுவதாக குற்றம்சாட்டினார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுடன் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்று உஸ்மா கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் இம்ரான் கானின் உடல்நலம் குறித்த சர்ச்சை ஓய்ந்துள்ளது.
