இந்து கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்தால், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அக்கட்சியையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சுதந்திரத்தால்தான், 140 ஆண்டுகளாக கட்சி இருக்கிறது. கட்சியில் சுதந்திரம் இல்லையெனில், பிற மாநில கட்சிகள் போல பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி காணாமல் போயிருக்கும். அனைத்து விதமான கருத்துகளை கொண்ட மக்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.
இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளனர்? 3 கோடி? ஏன்? யாரையும் திருமணம் செய்யாத அனுமன் உள்ளார். 2 முறை திருமணம் செய்த கடவுளும் உள்ளார். மதுபானம் அருந்தும் கடவுளும் உள்ளார். மதுபானம், இறைச்சியை கடவுளுக்கு மக்களும் படைக்கவும் செய்கின்றனர். இதுபோல பலவிதமான கடவுள்கள் உள்ளனர். அதுபோல்தான் காங்கிரஸ் கட்சியும். பலவித கருத்துகள், சிந்தனைகள் கொண்டோரை காங்கிரஸ் கொண்டுள்ளது.
நல்ல எண்ணம் இல்லையெனில், அதனால் நமக்கு எந்த பலனும் இல்லை. நமக்கு பிடித்தோரும் உள்ளனர், பிடிக்காதோரும் உள்ளனர்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார். அவரின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது கருத்துக்களுக்காக இந்து மதத்தினரிடம் ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
