சவுக்கு சங்கர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ‘பாசிசப் போக்காலேயே திமுக அழிந்து விடும்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரை பயங்கரவாதி போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?
ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
