கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு ஐதராபாத் சென்ற பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் தனது 70 அடி உயர சிலையை காணொலி மூலம் திறந்து வைத்த அவர், மைதானத்தில் நடந்து சென்று ரசிகர்களை சந்தித்து, அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக கோலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மெஸ்ஸி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து, கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மாலை ஐதராபாத் சென்ற மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜீவ் காந்தி மைதானத்திற்கு சென்ற மெஸ்ஸியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ‘மெஸ்ஸி மெஸ்ஸி’ என ஆரவாரமாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். மைதானத்தை சுற்றி வந்த அவர், ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடந்த பயிற்சி கால்பந்து ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்றார். முன்னதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும், மெஸ்ஸியும் சந்தித்து பேசினர்.
இந்தநிலையில், ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டார். மெஸ்ஸியின் வருகையையொட்டி ஐதராபாத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
