கனமழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழுகி சேதமடைந்துள்ளன.
நாகை மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாகவும் டெல்டா மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது.
இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தன. குறிப்பாக, 40 முதல் 60 நாட்களான சம்பா பயிர்களும், 20 முதல் 30 நாட்களான தாளடி பயிர்களும் முற்றிலும் மழைநீரில் மூழ்கின.
மழை நின்ற பிறகு வயலில் தேங்கிய மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், கனமழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் கீழையூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி, கருங்கண்ணி, திருமணங்குடி, ஈசனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் வடியவில்லை.
இதுவரை பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்யவில்லை. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அவை முற்றிலும் அழுகியதால், மீண்டும் மறு நடவு செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடிவதற்கு மேலும் 10 நாட்களுக்கு மேலாகும் என்பதால், விவசாயத்தைக் கைவிடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
