காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
PTI செய்தியின்படி, நேற்று (ஜனவரி 5) மாலை சோனியா காந்திக்கு திடீரென தீவிர இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் மார்பு நோய் நிபுணர்களின் (Chest Physician) நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சியோ அல்லது மருத்துவமனையோ இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சோனியா காந்தி கடந்த பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். தற்போது அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் பராமரிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னரே கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
