திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரை திமுக பேச்சுவார்த்தைக் குழு அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.யூ.எம்.எல். தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் 5 சீட்டு கேட்டதாகவும், திமுக 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
23ஆம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி , மதிமுக , மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுடனும், 26 ஆம் தேதி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 27 ஆம் தேதி – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி, காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டி தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இரவு 8.55 மணிக்கு சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேசினர்.
45 நிமிடங்கள் வரை நீட்டித்த இந்த சந்திப்பின்போதும், சுமார் 10 நிமிடங்கள் முதலமைச்சர், கே.சி.வேணுகோபால், கனிமொழி ஆகிய மூன்று பேர் மட்டும் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 17 ஆம் தேதி கே.சி வேணுகோபால் சென்னை வந்திருந்தபோது காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது நடைபெற்ற சந்திப்பில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
