அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மிக முக்கிய பங்காற்றினார். வெறும் 46 பந்துகளில் 89 ரன்கள் (5 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) குவித்து இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட உதவினார். இறுதிப்போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக மார்லன் சாமுவேல்ஸ் (85) மற்றும் கேன் வில்லியம்சன் (85) வைத்திருந்த சாதனையை சாம்சன் தகர்த்தார்.
இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடிய 5 போட்டிகளில் மொத்தமாக 321 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 319 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 12 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘கிங்’ கோலியின் இந்த சாதனையை சாம்சன் தற்போது கடந்துள்ளார். இந்தத் தொடரில் இவரது சராசரி 80.25 மற்றும் ஸ்டிரைக் ரேட் 199.37 என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரின் தொடக்கத்தில் ஆடும் லெவனில் இடம் பெறாத சஞ்சு சாம்சன், பின்னர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டிலும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் ஷாகித் அப்ரிடி மற்றும் விராட் கோலிக்கு பிறகு உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் (அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி) அடுத்தடுத்து அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தத் தொடர் முழுவதும் அவரது அதிரடி ஆட்டத்திற்காக ‘தொடர் நாயகன்’ (Player of the Tournament) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
