ஐந்து முறை பிஃபா உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான சர்வதேச நட்புப் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு மேற்கு வங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சால்ட் லேக் மைதானத்தில் (Salt Lake Stadium) நடைபெறவுள்ள இந்தப் போட்டி, பிஃபா தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள ஒரு அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் முதல் நிகழ்வாக இருக்கப் போகிறது. இதற்கான நிர்வாக உதவிகளை வழங்க மாநில அரசு உறுதியளித்துள்ளதாக AIFF தலைவர் கல்யாண் சவுபே தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் லியோனல் மெஸ்சி கொல்கத்தாவுக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை அடுத்து, தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெஸ்சியின் வருகையின் போது ஏற்பட்ட குழப்பங்களைப் போல இம்முறையும் நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது குறித்துப் பேசிய கல்யாண் சவுபே, அந்த ஒப்பீடுகள் தேவையற்றவை என்றார். இது ஒரு தனிநபரின் கண்காட்சி நிகழ்ச்சி கிடையாது என்றும், இது ஒரு அதிகாரப்பூர்வ ஃபிஃபா சர்வதேசப் போட்டி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த முறை நடந்தது ஒரு கால்பந்து போட்டி அல்ல, அது உலகப் புகழ்பெற்ற ஒரு வீரரின் தனிப்பட்ட நிகழ்வு. ஆனால், இது ஒரு சர்வதேச கால்பந்து போட்டி. ஃபிஃபா மற்றும் ஏஎப்சி அமைப்புகளின் திட்டமிடப்பட்ட நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படியே இது நடத்தப்படும். பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும். அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் மூலம் கொல்கத்தா மற்றும் இந்திய கால்பந்தின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்ல மேற்கு வங்க அரசுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் சவுபே குறிப்பிட்டார். இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளுடன் மோதி தனது திறனை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற சர்வதேச நட்புப் போட்டிகள் அவசியம் என்று AIFF கருதுகிறது. இந்தியாவின் தற்போதைய பிஃபா தரவரிசையை கருத்தில் கொண்டு, பிரேசில் அணியை இந்தியாவில் விளையாட வைப்பதற்காக நீண்ட காலமாக தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
