அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான ராணுவத் தாக்குதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்து தனது பிரத்யேக சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அதிரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை அவர் பெரிதாகக் கருதவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக உயர்வு என்பது, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக நாம் செலுத்த வேண்டிய “மிகச் சிறிய விலை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி, 108 டாலர் வரை உயர்ந்துள்ள நிலையில் டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல்கள் முற்றிலும் முறியடிக்கப்பட்டவுடன், கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக, முன்பு இருந்ததை விடவும் குறைவான நிலைக்குத் திரும்பும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த விலை உயர்வு குறித்து கவலைப்படுபவர்களையும், தனது நிலைப்பாட்டை எதிர்க்கிறவர்களையும் விமர்சித்துள்ள டிரம்ப், “இதை வேறுவிதமாகச் சிந்திப்பவர்கள் முட்டாள்கள்” (Only fools would think differently) எனப் பதிவிட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டிரம்பின் இந்தப் பேச்சு அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலில் இந்த விலை உயர்வு டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் வேளையில், அவர் போர் முடிவுக்குப் பிறகு நிலைமை சரியாகும் என மிகத் தீவிரமாக நம்புகிறார். பெட்ரோல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருந்தாலும், ஈரானை முழுமையாகக் கட்டுப்படுத்துவதே தனது தற்போதைய முதன்மை நோக்கம் என்பதை டிரம்ப் தனது பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
