மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம் குறித்து ஆலோசிக்க, மத்திய அரசு நாளை (மார்ச் 25 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள மோதலால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் விளக்கமளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்களத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சீரமைப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
ஈரான் , இஸ்ரேல் மற்றும் பரந்த மேற்கு ஆசியப் பிராந்தியத்தை உள்ளடக்கிய, தீவிரமடைந்து வரும் மோதல் குறித்த அரசின் நிலைப்பாட்டில் தெளிவும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முன்னதாக இன்று (மார்ச் 24) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்காசியப் போர் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “இந்த இக்கட்டான உலகளாவிய சூழல் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போலவே ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
