தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ரூ.2000 மற்றும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணயில் உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 எனும் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதனை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.
திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். மேலும், மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு, 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.
மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.
தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில், ‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி, தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும்.
மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 ‘பிளக்-அண்ட்-பிளே’ (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்பூங்காக்கள் மூலம், தமிழகத் தொழிலதிபர்கள் அத்திட்டத்தின் முழுப் பலன்களையும் பெறுவதை நமது அரசு உறுதி செய்யும்.
ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
