நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வழிவகை செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குறித்து இன்று மாலை 3 மணியளவில் பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்ற உள்ளார்.
மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் மசோதாவின் ஆரம்ப நிலையிலேயே தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் விவாதத்தின்போது பதில் அளிக்கப்படும் என்றும், தொடக்கத்திலேயே இவ்வாறு முட்டுக்கட்டை போடுவது முறையான போக்கு அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை லோக்சபாவில் அமித்ஷா அறிமுக செய்து வைத்து பேசும்போது, குறிக்கிட்ட அகிலேஷ் யாதவ், முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமித் ஷா, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு இட ஒதுக்கீடும் அரசமைப்புக்கு முரணானது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய வேணுகோபால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அதிகாரக் குவிப்பு செய்ய பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ஜம்மு – காஷ்மீரில் நீங்கள்(பாஜக) எப்படி தொகுதி மறுவரையறை செய்தீர்கள் என நாட்டு மக்களுக்கு தெரியும் என விமர்சித்த வேணுகோபால், அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவால் மக்கள் தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த நிலையில், அதன் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர். பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எந்தவித சமரசமுமின்றித் திட்டவட்டமாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே திமுக ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி மறுசீரமைப்போடு இதனை இணைப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் வாதிட்டார். 850 தொகுதிகளாக உயர்த்தும் முடிவானது மாநிலங்களுக்கு இடையேயான அதிகார சமநிலையைப் பாதிக்கும் என்பதால், அவை நடவடிக்கைகளில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு கூட்டத்தொடரில், இந்த மசோதாக்கள் மீதான விவாதம் இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
