போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரவும் வீடியோ குறித்து வெளியாகும் தகவல் தவறானது என மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்துள்ள சரத்குமார், வெண்மை நிறத்திலான பொடியை தூளாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பாக நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது பகிரப்பட்டு, அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல்கள் பரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டு அமைச்சர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அதில், அந்த வீடியோ சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், ஐபிஎல் போட்டி நடந்த போது தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததாகவும், குழந்தை மாத்திரையை விழுங்க மறுத்து துப்பியதால், அதனைச் சிறுவர்கள் உட்கொள்ளும் வகையில் பொடியாக்கி, நீரில் கலந்து கொடுக்கவே அந்தச் செயலைச் செய்தாகவும் அமைச்சர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அதைத் தவறாகச் சித்தரித்து, தற்போது போதைப்பொருள் பயன்படுத்துவது போல சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில், பொதுவெளியில் அப்படி ஒரு செயலைச் செய்வது சாத்தியமா? என்று கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சரத்குமார், இது முற்றிலும் பொய்யான மற்றும் உள்நோக்கம் கொண்ட வதந்தி என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
