நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் 251 உறுப்பினர்களின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், திமுக தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவைத் தங்களது கட்சி எவ்வித சமரசமுமின்றி எதிர்ப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு மட்டுமே திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதனுடன் தொகுதி மறுவரையறையை இணைப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய இரண்டும் ‘சான்ட்விச்’ போல ஒன்றாக இணைக்கப்பட்டு முன்வைக்கப்படுவதாக டி.ஆர். பாலு விமர்சித்தார். இந்த மசோதாவிற்கு எதிராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்த கருப்புக் கொடி போராட்டத்தை அவர் அவையில் குறிப்பிட்டபோது, சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு நகைச்சுவையாகப் பதிலளித்தார். “உங்கள் தலைவர் கருப்புக் கொடி ஏற்றினால் என்ன அல்லது நீலக் கொடிதான் ஏற்றினால் என்ன? அதை எதற்காக இங்கே லோக்சபாவில் குறிப்பிடுகிறீர்கள்?” எனச் சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினார். சபாநாயகரின் இந்த கிண்டலான கருத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், தென்மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்கும் இந்த மசோதாவைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
