எப்போதோ அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டு வர வைத்திருக்கிறார்கள் என விவாகரத்து குறித்து SA சந்திரசேகர் பேசியுள்ளார். இது அரசியலாக்கப்படுவது எதிர்கட்சிகளின் திட்டம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே நடந்த பிரச்னை பொதுவெளிக்கு வந்து விவாகரத்தில் நிற்கிறது. நேற்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் விவாகரத்து வழக்கு விசாரணைக்கும் வந்தது. அதனை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேக இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் பேட்டி கொடுத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள்ளும், அவரது ரசிகர்களுக்குள்ளும் முதல்முறையாக விதைத்தவர் என்றால் அது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அதனால்தான் விஜய்யின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட பணிகள் செய்ய வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழக வெற்றிக் கழகமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தனது அரசியல் பிரவேசத்தில் தந்தை எஸ்.ஏ.சியை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை விஜய்.
அவர் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் அவரை சுற்றி எக்கச்சக்க பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் தலையாயது என்றால் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுதான். விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து விவாகரத்து கோரியிருந்தார். நேற்று இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார் விஜய்.
சங்கீதா பிரச்னை, திரிஷாவுடன் இணைத்து வைத்து பேசுவது, தந்தை, தாயை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்க்கு எதிராக வைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் விஜய்யோ மேற்கூறிய அத்தனை விஷயங்களிலும் பட்டும் படாமல்தான் இதுவரை பேசியிருக்கிறார். அவர் அப்படி பேசியதையே அவருக்கு எதிராக முன்வைத்து; ஒருவருக்கு இவ்வளவு அலட்சியமும், தலைக்கனமும் கூடாது என்று பலரும் கருத்தை முன்வைத்தார்கள். மேலும் விஜய் ஏன் இன்னும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.
இந்நிலையில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான், அவர், என் மனைவி மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என ரொம்ப கேஷுவலாக கூறினார். அவர் அப்படித்தான். பெரிய விஷயத்தை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்வார். அப்போது நான், ‘இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. அவர்களை எதிர்த்தவர்களை இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை அவரிடம் கொடுத்தேன். நான் அதை எதிர்கொள்கிறேன் அப்பா என்று சொல்லிவிட்டார்.
அதேபோல் அரசியலில் கேரக்டர் படுகொலையும் செய்வார்கள். விஜய் அவருடைய குடும்பத்துக்கு எதிரி, அப்பா, அம்மாவுக்கு எதிரி என்ற பிம்பதை செட் செய்கிறார்கள். அது அவர்களுக்கு கை வந்த கலை. எப்போதோ நடந்து முடிந்து சமரசம் ஆகி கையெழுத்தாகி முடிந்துபோன விஷயத்தை இப்போது ஏன் சரியாக வெளியே கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் அழகாக செய்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கிறார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது” என்றார்.
