தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,262 கோடி என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
தமிழ்நாட்டின் வாக்காளர் தீவிரத் திருத்தப் (SIR) பணிக்கு பிறகு 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7, 728 பேர் மூன்றாம் பாலினத்தவர். 14.59 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்றார். இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 65 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,262 கோடி என்றும் ரொக்கமாக ரூ.543 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்ட அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு மையங்களுக்கு வரும் அனைத்துப் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காக 300 கம்பெனிப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவை அந்தந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் எவ்விதமான விரும்பத்தகாத சம்பவங்களும் இன்றித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டார்.
