புதுச்சேரி அருகே தகாத உறவு பிரச்சினை காரணமாக, கெமிக்கல் இன்ஜினியர் ஒருவர் வீட்டிலேயே தாக்கி உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). கெமிக்கல் இன்ஜினியரான மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த ராஜாவுடன் நெருங்கிய நட்பில் இருந்ததால், அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, வசந்தராஜாவின் மனைவியுடன், மணிகண்டனுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வசந்த ராஜா பலமுறை கண்டித்தும், மணிகண்டன் நடத்தையில் மாற்றம் இல்லாததால் இருவரிடையேயும் விரோதம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மணிகண்டனின் இருசக்கரவாகனத்தை வசந்த ராஜா அடமானம் வைத்து பணம் பெற்றது தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மணிகண்டனுக்கும் வசந்தராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது. இதன் உச்சகட்டமாக வசந்தராஜா, அங்கிருந்த கடப்பாரையால் சரமாரியாகத் தாக்கியதில் மணிகண்டன்பலத்த காயம் அடைந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து, மறைந்திருந்த வசந்த ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
