வழக்கறிஞர் சங்கங்களின் மிகப் பெரிய சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) தேர்தல் நாளை நடைபெறுகின்றது.
தமிழகத்தில் மிகப் பெரிய வழக்கறிஞர் சங்கமாகவும் 150 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சங்கமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (MHAA) உள்ளது. இதில் சுமார் 21 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 5 ஆயிரத்து 800 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் நிலையில், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடக்கிறது.
தலைவர் பதவிக்கு எம்.வேல்முருகன், ஆர்.சி.பால் கனகராஜ், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 5 பேரும் துணை தலைவர் பதவிக்கு பாரதி, மகாவீர் சிவாஜி, மோகன்தாஸ், முரளி, சசிக்குமார் உள்ளிட்ட 13 பேரும் போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு எஸ்.அறிவழகன், எஸ்.காமராஜ், எஸ் செந்தமிழன் உள்ளிட்ட 9 பேரும் பொருளாளர் பதவிக்கு ஆனந்த், ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
நூலகர் பதவிக்கு 7 பேர்.6 மூத்த செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 49 பேரும், 5 இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 16 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 115பேர் போட்டியிடுகின்றனர்.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது.. நாளை (ஏப்ரல் 29 தேதி) காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் எனவும் முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதிவிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர் மற்ற பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடனே வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வெற்றி பெற்றவர்கள் அடுத்த மூன்றாண்டு ஆண்டு சங்க பதவியில் இருப்பார்கள்.
