புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயபுரம் நடுப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் – விஜயலட்சுமி தம்பதியின் மகன் ஹரிகரன். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பினை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் முடித்துள்ளார். கடந்த 21ஆம் தேதி முதல் ஹரிஹரன் மாயமானதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
முன்னதாக ஹரிகரன் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் மாயமாகி இருந்தார். விசாரணையில் வீட்டின் அருகே உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து இருவரும் அவரவர் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தெரியாமல் ஓடி வந்து விட்டதாகவும் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது எனவும் கூறி அழுதுள்ளனர் பெற்றோர்கள் அவர்களை திரும்ப வரச் சொல்லி காவல் நிலையத்தில் வைத்து சமரசம் பேசி அவரவர் பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டனர்
இதன்பின்னர் இருவரும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், இருந்துவந்த நிலையில்தான், கடந்த 21-ஆம் தேதி முதல் ஹரிகரனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்குள்ள குவாரியில் ஹரிகரனின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலில் வெள்ளனூர் போலீசார், சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பெண் வீட்டார்தான் காரணம் எனவும் கூறி ஹரிகரனின் பெற்றோர் சடலத்தை வாங்காமல் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், சடலத்தைப் பெற்றுக் கொண்டனர். சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்தவர்கள், உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் எனக் கூறியுள்ளனர்.

சாதிய அச்சுறுத்தல் காரணமாக 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ள நிகழ்வில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது.
இளைஞர்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
மேலும், இவ்வாறான சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
