கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்துள்ளனர்.
இதையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று அதிகாலை யாகசாலைகள் பூஜைகள் நிறைவுபெற்று, தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள், கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கருவறையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ பெரிய மாரியம்மன் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா மங்கள ஆரத்திகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
