திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோரிடையே வெடித்துள்ள இந்த மோதல், தற்போதையை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சேகர்பாபுவின் தன்னிச்சையான முடிவுகளும், நிர்வாகிகளையும், கட்சித் தொண்டர்களை மதிக்காமல் எப்போதுமே சென்னையின் மன்னர் என்று தன்னை நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டதுமே மு.க.ஸ்டாலின் தோல்வியடைய முக்கிய காரணம் என்றும் அதே நேரத்தில் எதிர்தரப்பில் நிற்பவரின் பலத்தை பற்றி எந்த கவலையும்படாமலும் கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமலும் சேகர்பாபு தான்தோன்றித்தனமாக செயல்பட்ட காரணத்தாலும் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள் திமுகவினர்.
இந்த முறை தொகுதி மாறி, சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் என குடும்ப உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோதுகூட, சேகர்பாபு மீது இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால், கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் போட்டியிட்டதாகவும், களம் திமுக ஆதரவில் இருந்து மாறி வருவது குறித்த தகவல்களை பெரிதாக கண்டுகொள்ளாமலும் அது குறித்த விவரங்களை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்காமலும் சேகர்பாபு மறைத்துவிட்டதாக குமுறுகிறார்கள் கட்சியினர்
இந்தநிலையில், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திலிருந்து மிகவும் சோகமான முகத்துடன் வெளியேறும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன், “தோல்விக்குக் காரணமானவர் எப்படி எந்தவித கூச்சமும் இல்லாமல் தலைவரை நேரில் சந்திக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியதோடு, அமைச்சர் சேகர்பாபுவையும் அந்தப் பதிவில் நேரடியாக டேக் செய்துள்ளார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகப் பார்க்கப்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகப் பரந்தாமன் வைத்திருக்கும் விமர்சனம், சென்னை திமுகவுக்குள் இருக்கும் கோஷ்டி பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பணிகளில் தொய்வு அல்லது குறிப்பிட்ட தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சேகர்பாபுவின் செயல்பாடுகளே காரணம் என்பது பரந்தாமனின் மறைமுகக் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் பதிவின் கீழ் திமுக ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சேகர்பாபுவுக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “கட்சித் தலைமை உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கைகள் வலுத்து வருவதால், சென்னை திமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது இந்தப் பதிவு வைரலாகி வரும் நிலையில், திமுக தலைமை இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அல்லது உட்கட்சி விவகாரங்களால் முதல்வர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பொதுவெளியில் மோதிக்கொள்வது தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சேகர்பாபு மீதான இந்தப் புகார் தொடர்பாக கட்சி ரீதியான விளக்கம் கேட்கப்படுமா அல்லது பரந்தாமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
