தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்க, தமிழக வெற்றிக் கழகம் தற்போது அதிரடியாக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை அழைக்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தவெக தரப்பு கருதுகிறது. இதனால், “தனிப்பெரும் கட்சி” என்ற அடிப்படையில் தங்களுக்கு உடனடியாக அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்ய விஜய் தலைமையிலான தவெக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.
இந்த சட்டப் போராட்டத்தின் காரணமாக, தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கும் வரை, பதவியேற்பு விழாவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த விழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா மேலும் ஒரு வார காலத்திற்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் தலையீடு தவெக-விற்குச் சாதகமாக அமையுமா அல்லது ஆளுநரின் முடிவில் மாற்றம் இருக்குமா என்பதை ஒட்டுமொத்த தமிழகமே உற்று நோக்கி வருகிறது.
