தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முக்கிய அதிரடி நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் விஜய். இதன் அடிப்படையில் மொத்தமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. அதற்கான பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், அடுத்த அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முதலமைச்சரின் தனிச் செயலாளர் – 3 பதவிக்கு அண்ணாதுரை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நீதித்துறை செயலாளராக சித்திக், முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராகவும், ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ் சுற்றுலா பண்பாடு மற்றும் கலாச்சார துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக செந்தில் குமாரும், 2ம் நிலை தனிச்செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதலமைச்சர் விஜய்யின் கூடுதல் செயலாளராக விஷ்ணு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உதயசந்திரன், அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
