தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவின் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தலைவரும் முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய்யின் அமைச்சரவையில், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவான கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியில் பத்தரை லட்சம் கோடி ரூபாயை எடுத்துட்டுப் போயிட்டாங்க எனக் கூறியிருந்தார்.
திமுக ஆட்சிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை கடிந்துரைக்கும் வகையில் முன்னாள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும் எனக் கூறியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகச் சாடியுள்ளார்.
எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா என வினா எழுப்பியுள்ளார்.
