தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கியுள்ள நிலையில், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்,
https://x.com/i/status/2055905870245204103
மதிப்பிற்குரிய அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்குத் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை ஒதுக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது அவரைத் தாழ்த்திப் பேசுவதற்காக அல்ல. ஆனால், தற்போதைய சூழலில் நமது ஒட்டுமொத்தத் திரைப்படத் துறையும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல அவசரச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளனர்.
இத்தகையச் சூழலில், நமது சினிமா துறையில் என்ன நடக்கிறது என்ற அனுபவமே இல்லாத அல்லது மிகக் குறைந்த அனுபவம் கொண்ட ஒருவரிடம், ஒரு சங்கமாகவோ அல்லது தனிநபராகவோ எங்களின் குறைகளை எப்படி நாங்கள் கொண்டு சேர்க்க முடியும்? கடந்த 30 ஆண்டுகளாக அடிமட்டத்திலிருந்து இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருந்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் போன்ற ஒருவரால் மட்டுமே எங்களின் ஒட்டுமொத்த வலியையும், தேவைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த 9 ஆண்டுகளாகத் திரைத்துறை சார்பில் தொடர்ந்து கோரப்பட்டு வரும், ஆனால் இதுவரை நிறைவேற்றப்படாத 3 முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு விஷால் கொண்டு சென்றுள்ளார்.
அதாவது, அரசு சார்பிலான அதிகாரப்பூர்வ ஆன்லைன் டிக்கெட் வழங்கும் முறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், தற்போது இ-டிக்கெட் கட்டணமாக ஒரு டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வரை செலுத்தி வரும் ரசிகர்களுக்கும் பெரிய நிம்மதி கிடைக்கும்.
மத்திய அரசின் “ஒரே இந்தியா, ஒரே வரி கொள்கைக்கு முரணாக, இந்தியாவில் இரண்டு விதமான வரிகளை (ஜிஎஸ்டி + உள்ளாட்சி வரி) விதிக்கும் ஒரே மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இந்த உள்ளாட்சி கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
நலிவடைந்த தயாரிப்பாளர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு அரசு தற்போது வழங்கும் மிகக் குறைந்த மானியத் தொகையை (Subsidy) ஆண்டுதோறும் கணிசமாக உயர்த்த வேண்டும்.
“இந்தக் கோரிக்கைகளை நான் முதலமைச்சரிடம் மனுவாகக் கூடக் கொடுத்திருக்கலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இதையேதான் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அமைச்சர் ராஜ்மோகனை விமர்சிப்பதற்காக அல்லாமல், திரைப்படத் துறைக்குத் தேவையான உண்மையான நிவாரணத்தை முதலமைச்சர் விஜய்யால் மட்டுமே நேரடியாக வழங்க முடியும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து” என்று விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
