திமுக கூட்டணிக் கட்சிகளான விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதை திமுக விரும்பவில்லை என்பதை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பதிவு அம்பலமாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், திமுக கூட்டணிக்கு எதிராகக் களம் கண்ட தமிழக வெற்றிக் களம் ஆட்சி அமைத்துள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ச.ஜோசப் விஜய், தனது அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, திமுகவுடன் சொல்லிக் கொள்ளாமலேயே காங்கிரஸ் ஓடோடிச் சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற கட்சிகள் திமுகவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே தங்களின் ஆதரவைத் தெரிவித்தன.
அதுவும் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்தே தருவதாக அறிவித்தன. ஆயினும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று இந்திய யூன்யன் முஸ்லிம் லீக்கும், விசிகவும் அமைச்சரவையில் இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
விசிகவில் முன்னணி நிர்வாகிகளின் அழுத்தத்தின் காரணமாகவே, திருமாவளன் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆயினும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்னும் விசிகவின் முழக்கம் இன்று நனவாகி இருக்கிறது.
ஆனால், விசிகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் இணைந்ததை திமுக தலைமை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது, திமுகவின் துணைப் பொது செயலாளரான ஆ.ராசா வெளியிட்டுள்ள ஒரு பதிவு.

முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!
என ஆ.ராசா பதிவிட்டுள்ளார். பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை என்னும் வரிகள், விலை மாதரைப் போல் விசிகவையும், ஐயூஎம்எல்லையும் மிகவும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசிக என்பது தலித் மக்களுக்கான இயக்கமாக உள்ள நிலையில், தலித்தான ஆ.ராசாவை வைத்தே இப்படி திமுக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதே நேரம் ஆ.ராசாவின் பதிவுக்கு நெட்டிசன்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
முன் ஏற ஏணி தேடியவர்கள், இன்று உயரத்தில் இன்னோர் ஏறும்போது ஏணியையே எரிக்க நினைக்கிறார்கள். மூட சாதியை நொறுக்க சிறுத்தை களமிறங்கினால், அது யாரின் வாசலிலும் கட்டுப்பட்ட நாய் அல்ல. விசில் சத்தமல்ல அது; விடுதலையின் அறிவிப்பு. பூ முடித்தவன் புறந்தள்ளப்படவில்லை; பூவை தனக்கே சொத்தாக்க நினைத்த அகந்தையே புறந்தள்ளப்படுகிறது. காத்திருங்கள். காலமும் பேசும். தேசமும் காணும். வர்த்தமானமும் எழுதும். சமூகநீதி உங்கள் கையொப்பத்தில் பிறந்ததல்ல; ஒடுக்கப்பட்டவர் அதிகாரத்தில் அமரும் போது அதன் அர்த்தம் நிரூபிக்கப்படும். வெற்றி வன்மத்துக்கல்ல. வெற்றி பிரதிநிதித்துவத்திற்கே.
