தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுக்கு சமூக நீதி நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் உள்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றதுடன், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 35 அமைச்சர்களில், 33 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு அமைச்சர் பதவியினை ஏற்றுக் கொள்ள தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று காலை முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் எம்.எல்.ஏவும், விசிகவின் வன்னியரசு எம்.எல்.ஏவும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஒதுக்கப்படாம் இருந்த சிறுபான்மையினர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறையும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இருவரும் பதவியேற்ற அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இருவருக்குமான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுவுக்கு சமூக நீதி நலத்துறையும் வழங்கி ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.
இதுவரை சமூக நீதி நலத்துறை என தமிழக அமைச்சரவையில் இல்லையே என சந்தேகம் எழுந்த நிலையில், ஆதிதிராவிட நலத்துறையின் பெயர்தான் சமூக நீதி நலத்துறை என மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக இருப்பவர்கள் பிற்படுத்த மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்து வந்தனர். அதுமட்டுமின்றி துறையின் பெயரும் ஒரு சாதிய அடையாளத்தை தாங்கியதாகவே இருந்து வந்த நிலையில்தான், புதிதாகப் பொறுப்பேற்ற ச.ஜோசப் விஜய் அரசு அதனை மாற்றும் முயற்சியாக சமூக நீதி நலத்துறை என மாற்றி அமைத்துள்ளது.
சமூக நீதிப் பேசி வந்த அரசுகள் கூட செய்யாத மாற்றத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் செய்திருப்பதாக பல்வேறு தரப்பிலும் வரவேற்பு எழுந்துள்ளது.
எம்.செய்யது
