தவெக அமைச்சரவையில் இணைந்ததில் பதவி ஆசை காரணம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுவதைத் தவிர்க்கவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும் விசிக, தவெக தலைமையிலான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மக்கள் ஒரு கூட்டணி ஆட்சியை விரும்புவதை உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த போது, ஜனநாயகச் சூழலைப் பாதுகாக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவும் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக திருமாவளவன் கூறினார்.
இந்த முக்கிய முடிவு இடதுசாரித் தோழமை கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்களோடு, ஆதரவோடு, இசைவோடு தான் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். அதேவேளையில், வெளியில் இருந்து ஆதரவு என்றநிலை இருந்த போது, கட்சியினரின் நிலைப்பாட்டை ஏற்றே, தவெக அமைச்சரவையில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததில் பதவி ஆசை காரணம் இல்லை என்றும் திருமாவளவன் கூறினார்.
நான் சர்வாதிகாரி இல்லை என்றும் ஜனநாயகவாதி என்றும் திமுக கூட்டணிக்கு விசிக உறுதியுடன் இருந்ததை போகிறபோக்கில் விமர்சிக்கக் கூடாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
