கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகலுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் அ.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 50ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கான கடன் தொகை முழுவதும், சிறு விவசாயிகளுக்கு 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
50ஆயிரம் முதல் 60ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 40ஆயிரமும், சிறு விவசாயிகளுக்கு 20ஆயிரம் ரூபாயும்,
60ஆயிரம் முதல் 70ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 30ஆயிரமும் சிறு விவசாயிகளுக்கு 15ஆயிரமும்,
70ஆயிரம் முதல் 80ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 20ஆயிரமும் சிறு விவசாயிகளுக்கு 10ஆயிரமும்,
80ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை வரை கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு 10ஆயிரமும் சிறு விவசாயிகளுக்கு 5ஆயிரமும்,
1 இலட்சம் ரூபாய்க்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு 5ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு எழுந்துள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியும் நிலவுகிறது.
சட்டமன்ற தேர்தலின்போது, 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கியுள்ளபயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில்,
தற்போது 50ஆயிரம் ரூபாய் மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அதில் சில விதிமுறைகளைப் புகுத்தி ஏமாற்றத்தை அளித்ததைப் போல் தற்போது தவெக அரசும் ஏமாற்றத்தை அளிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
