“ராஜினாமா கடிதம் முறையாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்பேன்; எனது முடிவை அறிவிக்குமாறு யாரும் எனக்குக் கெடு விதிக்க முடியாது” என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அவர், தனது கைப்பட எழுதி எடுத்து வந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தந்தார். “ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா கடிதம் சட்டவிதிகளின்படி முறையாக இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் சபாநாயகரின் கடமை. இந்த விவகாரத்தில் எனது முடிவை உடனடியாக அறிவிக்குமாறு யாரும் எனக்குக் கெடு விதிக்க முடியாது. ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகராகிய எனது முடிவே இறுதியானது.
நான் எப்போதும் சட்டமன்றப் பேரவையின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நடுநிலையாகச் செயல்படுவேன். யாரையும் பழிவாங்கும் இடமாக சபாநாயகர் அலுவலகம் ஒருபோதும் செயல்படாது. எனவே, இந்த விவகாரத்தில் அதிமுகவினர் முன்வைக்கும் அரசியல் வாதங்களைப் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை.”
எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட மனு குறித்துப் பேசிய சபாநாயகர், அந்த மனு மீதான சட்டப்பூர்வ விளக்கத்தை உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு பின்னர் விரிவாகத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
