மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாகத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 62-ஆவது நினைவுநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை, நவீன இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேருவின் சாதனைகளைப் பகிர்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் விடையளித்தார்.
பிரதமரை முதலமைச்சர்கள் சந்திப்பது வழமையான நடைமுறை என்றும் அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் சதீஷன் நேற்று சந்தித்ததாகவும் தற்போது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது எனவும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி செய்வதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளாது எனவும் விவசாயிகளுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் கு.செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் ஒருபோதும் குதிரைப் பேரத்தை அனுமதிக்காது. அருணாசலப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் குதிரைப்பேரத்தை எதிர்த்ததைப் போல கண்டித்ததைப் போல, அதே அளவுகோல்தான் எல்லா மாநிலத்திலும் எனக் கூறினார்.

ஐந்து மாநில தேர்தலுக்காக பெட்ரோல்,டீசல், காஸ் விலையை ஏற்றாமல் உள்ளார்கள். தேர்தல் முடிந்ததும் மோடி சர்க்கார் விலையை ஏற்றும் எனச் சொன்னோம். அதை இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
இந்தியாவிலேயே பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் மக்கள் மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் எதிர்க்கும் ஒரே தலைவர் ராகுல்காந்திதான் எனத் தெரிவித்தார்.
