நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளது குஜராத்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடி ஆட்டம் (96 ரன்கள்) மற்றும் இறுதி ஓவர்களில் டோனோவன் பெரைராவின் சிக்ஸர் மழையால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடினமான 215 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஜோடி கனவுத்தொடக்கத்தை தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்களை விளாசி அதிரடியை ஆரம்பித்தனர்.
இவர்கள் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து அசத்தினர். இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் என்ற புதிய சாதனையை படைத்தது. சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கேப்டன் ஷுப்மன் கில், வெறும் 47 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டன் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனைகளை அவர் தன்வசப்படுத்தினார். கில் 53 பந்துகளில் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் குஜராத் அணி தனது 5 ஐபிஎல் சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாளை (மே 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள மெகா இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் களம் காண்கிறது.
