மதுரையில், 10 மணி நேரமாக சென்னை,திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்லாததால், காத்திருந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணி முதல் தற்பொழுது வரை சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குச் செல்ல பேருந்து இல்லாமல் 10 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறிகளை கைவிட்டு பேருந்து நிலையத்திற்குள் சென்றனர்.

இரவு முதல் அதிகாலை வரை வந்த பேருந்துகள் அனைத்திலும் நேம் போர்டுகள் ஆப் செய்யப்பட்டு வருவதாகவும், அதேபோல 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சீட்டுக்கு கூடுதலாக வசூல் செய்வதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்
அரசு போக்குவரத்து துறை சார்பில் இது குறித்து கேட்ட பொழுது “வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
