தற்போதைய முதலமைச்சரான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்போது வரையிலும் படம் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது.
அதற்குள் தேர்தல் நடந்து அதில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சரும் ஆகிவிட்டார். இதற்கிடையில் முழு படமும் இணையத்தில் கசிந்து பலரும் அதனை பார்த்தும் விட்டனர். இந்த நிலையில், ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேச தனக்கு தைரியம் இல்லை என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஜனநாயகன் ரிலீஸ் குறித்து வாய்திறந்துள்ளார். ”படம் ரிலீஸ் என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அதனால் படம் வரும்போது பாத்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
ஒரு படத்தின் இயக்குநரே, அப்படத்தின் ரிலீஸ் குறித்து பேச தயங்குவது, சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
