இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் பாலதண்டாயுதத்தின் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்துகொண்டு, மறைந்த தலைவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு வீரபாண்டியன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
திருவள்ளுவருக்கு காவி ஆடை உடுத்துவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் சட்டத்தின் ஆட்சி முறையையே நிலைகுலையச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. ஆளுநர் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். வள்ளுவரைத் தங்களுக்குச் சாதகமாக வலது பக்கம் திருப்ப அவர் முயலக் கூடாது; அப்படிச் செய்தால் வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்காது.
கூட்டணி மற்றும் அரசியல் பேரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், குதிரை பேரம் என்ற சொல்லுக்கே கம்யூனிஸ்ட் கட்சிகளில் இடமில்லை. அப்படி ஒரு அரசியல் எங்களுக்குத் தெரியவும் தெரியாது. குதிரை பேரம் போன்ற அறமற்ற, தர்மத்திற்குப் புறம்பான அரசியலை நாங்கள் எப்போதும் கடுமையாக எதிர்ப்போம். அதிமுக – திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதுதான் மிக முக்கியம். அதன் அடிப்படையில்தான் இடதுசாரிகள் தங்களுடைய அரசியல் முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய வீரபாண்டியன், “தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசு வேண்டுமானால் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் எந்தவொரு கால அவகாசமும் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்துப் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் இதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், “இடதுசாரிகள் கேரளாவில் அமலாக்கத்துறைக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். கம்யூனிஸ்டுகளின் வீடுகளில் அமலாக்கத்துறை எத்தனை முறை வேண்டுமானாலும் சோதனை நடத்திக் கொள்ளட்டும், ஏன் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் இல்லங்களில் கூட நடத்தட்டும். அங்கு அவர்களுக்குப் படிப்பதற்கான புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது” என்று தெரிவித்தார்.
