தேர்தலில் யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது” என்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பெருமிதத்தோடு பேசியிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக அக்கட்சியின் வேட்பாளரே பேசியுள்ள வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி, கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியைமைத்துள்ளது. ஆட்சியமைக்க உரிமைக்கோரிய நாள் முதலே பல விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதாவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், தற்போது ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்ததால் தான் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்று தவெகவை சேர்ந்த ஓமலூர் தொகுதி வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அதாவது, சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்குத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு லட்சுமணன் வெற்றி பெற்றார். அதே சமயம், ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அதியமான் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது தொகுதி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதியமான், “பக்கத்துல நம்ம சேலம் மேற்கு தொகுதில வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு ரூ.2,000 பணம் தொகுதி முழுக்க கொடுத்தார். அதுதான் நம்ம தொகுதியில நமக்கான வெற்றி வாய்ப்பை டேமேஜ் பண்ணிடுச்சு. அதுக்கு முன்னாடி வரை மக்கள்கிட்ட நம்மளோட திட்டங்கள் எல்லாத்தையும் கொண்டு சேர்த்தேன்.. ஆனா கடைசி 2 நாள்ல எல்லாமே டோட்டலா பெயிலியர் ஆகிடுச்சு.. மினிமம் 6 ஆயிரம் ஓட்டு பணத்தாலயே போச்சு” எனப் புலம்பி தள்ளியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், தங்கள் கட்சி நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தித்ததாகக் கூறி வரும் நிலையில், அக்கட்சியின் தோல்வியடைந்த வேட்பாளரே, தங்களது கட்சியின் மற்றொரு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பண நாயகத்தைப் பயன்படுத்திதான் வென்றார் என்று பேசியிருப்பது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
