தவறான ஆட்சி மற்றும் நிர்வாகம் காரணமாக காங்கிரசை மக்கள் ஓரம்கட்டி உள்ளதாக பிரதமர் மோடி சாடி உள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூ.18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் குழப்பத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருவதாக விமர்சித்தார். ஆனால், நாட்டின் வாக்காளர்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டி வருவதாக தெரிவித்தார். குஜராத் மக்கள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை அரசியலில் ஓரம்கட்டிவிட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் மக்கள் அவர்களது தவறான நிர்வாகத்தால் சலிப்படைந்து போய் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களிடையே எழுந்த கடுமையான அதிருப்தி காரணமாகவே, அங்கு முதலமைச்சரை மாற்ற வேண்டிய கட்டாயம் அந்த கட்சிக்கு ஏற்பட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
உலகளவில் கொரோனா பாதிப்பு, போர்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல நெருக்கடிகள் நீடித்து வரும் வேளையிலும், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா அனைத்து சவால்களையும் மன உறுதியோடு எதிர்கொண்டு வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
