மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அதிகரித்துள்ள மோதல் மற்றும் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஓமனின் ஷினாஸ் (Shinas) துறைமுகம் அருகே 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பல் ‘எம்.டி ஜல்வீர்’ (MT Jalveer) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கினியா (Guinea) நாட்டின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், ஒரு ‘அஸ்பால்ட்/பிடுமன்’ (Asphalt/Bitumen) டேங்கர் ரகக் கப்பலாகும். ‘மரைன் டிராஃபிக்’ (MarineTraffic) இணையதளத் தகவல்படி, இந்தக் கப்பல் 119.95 மீட்டர் நீளமும், 16.84 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 20 இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர். கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தூதரகம், “ஓமனின் ஷினாஸ் துறைமுகம் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், கூடுதல் விவரங்களுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 8ம் தேதி நடந்த முதல் சம்பவத்தில் ‘எம்.டி மரிவெக்ஸ்’ (MT Marivex) என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து ஜூன் 10ம் தேதி நேற்று ஓமன் வளைகுடாவில் பலாவ் (Palau) நாட்டு கொடியுடன் சென்ற ‘எம்.டி செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற டேங்கர் கப்பல் தாக்கப்பட்டது. இதில் இருந்த 24 பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், உயிரிழந்த இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், அரசு எப்போதும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜேசன் மீக்ஸ்க்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடல் வழிப் போக்குவரத்து எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், எந்தச் சூழலிலும் வணிகக் கப்பல்களையோ அல்லது சிவிலியன் உள்கட்டமைப்புகளையோ இலக்கு வைக்கக் கூடாது என்றும் இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
