உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 புள்ளிகளுடன் வென்று தனது வெற்றிக் கணக்கை மெக்சிகோ அணி தொடங்கியுள்ளது.
கால்பந்தாட்ட ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு பிரியர்களால் மிகவும் எதிர்பாக்கப்பட்ட பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கியது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய போட்டிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மெக்சிகோ நகரில் பிரமாண்ட விழாவுடன் முதல் போட்டி தொடங்கியது.
இந்தப் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தார்.
ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் ரவுல் ஜெமிஸ் மற்றொரு கோல் அடித்தார்.

தென் ஆப்பிரிக்க வீரர்களின் கோலுக்கான முயற்சிகள் மெக்சிகோவிடம் பலிக்கவில்லை.
இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி மெக்சிகோ அணி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
மெக்சிகோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் தனது முதல் வெற்றியை மெக்சிகோ பதிவு செய்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2வது லீக் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் களம் காண்கின்றன.
