பள்ளிகள், மழலையர் காப்பகங்கள் மற்றும் வீடுகளில் சுகாதாரம் குறைவினால் குழந்தைகளிடம் வேகமாகப் பரவக்கூடிய ‘ஷிகெல்லா’ (Shigella) என்ற குடல் பாக்டீரியா தொற்று குறித்து குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இந்தத் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஆரம்பத்தில் சாதாரண வயிற்று உபாதையாகத் தோன்றும் இந்தத் தொற்றின் முக்கிய அறிகுறிகள் என்னவென்றால், கடுமையான வயிற்றுப்போக்கு , காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்
தொற்று பரவுவது எப்படி? பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக கைகள், உணவு, தண்ணீர் மற்றும் அடிக்கடி தொடும் பொருட்கள் வழியாக இந்த பாக்டீரியா மிக எளிதாகப் பரவுகிறது. குழந்தைகள் கழிவறைக்குச் சென்ற பின் கைகளைச் சரியாகக் கழுவாமல், விளையாட்டுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்வதால் பள்ளிகளில் இது வேகமாகப் பரவுகிறது.
தடுக்கும் முறைகள்: கழிவறையைப் பயன்படுத்திய பின்பும், சாப்பிடுவதற்கு முன்னும் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், துண்டுகள் மற்றும் தட்டுகளைக் குழந்தைகள் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பள்ளி வகுப்பறைகள், மேஜைகள், கதவுக் கைப்பிடிகள் மற்றும் கழிவறைகளைத் தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இத்தொற்றினால் பாதிப்பு அதிகமாகலாம். அதிகப்படியான தாகம், உலர்ந்த வாய், சிறுநீர் கழிப்பது குறைதல், அசாதாரண சோர்வு, நீடித்த காய்ச்சல் மற்றும் ரத்த வயிற்றுப்போக்கு போன்ற தீவிர நீரிழப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
பள்ளிக்கு எப்போது திரும்பலாம்? பொதுவாக 5 முதல் 7 நாட்களில் இதிலிருந்து குணமடையலாம். குழந்தைக்குக் காய்ச்சல் முற்றிலும் குணமாகி, மலம் சாதாரண நிலைக்குத் திரும்பிய பிறகும், மருத்துவரின் முறையான அனுமதி பெற்ற பிறகே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
