முதலமைச்சர் விஜய் வரையறுத்துள்ள கல்விக் கொள்கை சட்டப்பேரவையில் இடம்பெறும் எனவும் அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம் எனவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:-
சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவையின் மரபுகள் என்ன என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. சட்டப்பேரவை மரபுகள் குறித்து வல்லுனர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பணியிடமாறுதல் வழங்கப்படாது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் நியாயமான முறையில் பணி மாறுதல் வழங்கப்படும்.
கவுன்சிலிங் அடிப்படையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்படும். கொள்கை முடிவு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் இருக்கும்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.
கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட அதே கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா? என்னும் கேள்விக்கு,
கடந்த ஆட்சி கல்விக் கொள்கை இந்த ஆட்சி கல்விக் கொள்கை என்று கிடையாது. முதலமைச்சர் வரையறுத்திருக்கின்ற கல்விக் கொள்கை சட்டப்பேரவையில் இடம்பெறும், அதன் அடிப்படையில் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
