அரசியல் குறித்து யாருக்கு யார் பாடம் நடத்துவது என்பதுபோல் வெளியாகியுள்ள இரண்டு ஏ.ஐ. புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
17-வது சட்டப்பேரவையின் புதிய எம்.எல்.ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மீடியாக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பாடம் நடத்துவது போல் ஏ.ஐ.யில் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அந்தப் புகைப்படத்தில்,
1. ஊடகங்களை மதியுங்கள் ; அவர்கள் பொதுமக்களின் கருத்தை வடிவமைக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுடன் கண்ணியமாகச் செயல்படுங்கள்.
2. முதலில் கேளுங்கள், பிறகு பதிலளியுங்கள் ; அவர்கள் பேசுவதை முழுமையாகக் கவனியுங்கள். அவர்கள் பேசி முடிக்கும் வரை இடைமறிக்காதீர்கள்.
3. நிதானமாகவும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள் : கோபத்தையோ அல்லது அகங்காரத்தையோ வெளிப்படுத்தாதீர்கள். எப்பொழுதும் அமைதியைக் கடைப்பிடியுங்கள்.
4. முக்கியக் கருத்தைச் முதலில் சொல்லுங்கள் : நீங்கள் சொல்ல வந்த முக்கிய விஷயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முதலில் முன்வையுங்கள்.
5. உணர்ச்சிகளைத் தவிர்க்கவும், உண்மைகளைப் பேசுங்கள்: உணர்ச்சிகள் தேவையற்ற சலசலப்பை உருவாக்கும். தரவுகளும் உண்மைகளும் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும்.
6. ஒரு நேரத்தில் ஒரு தலைப்பில் மட்டும் பேசுங்கள் : தேவையற்ற திசைதிருப்பல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்களின் இலக்கு என்னவோ அதிலேயே கவனத்தைச் செலுத்துங்கள்.
7. நம்பிக்கையுடன் உரையை முடியுங்கள்: பேசும் கடைசி வார்த்தைகள் வலுவானதாகவும், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள்
தங்க விதி: ஊடகங்கள் எதிரிகள் அல்ல; மக்களிடம் உங்களைச் சேர்க்கும் பாலமே அவர்கள்.
நினைவில் கொள்க: நீங்கள் பேசுவது செய்தியாளர்களிடம் மட்டுமல்ல; 7 கோடி தமிழ் மக்களிடம் பேசுகிறீர்கள்.
என பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக தவெக தரப்பில், ஜெயக்குமாருக்கு, முதலமைச்சர் விஜய் மக்களுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என வகுப்பெடுப்பது போல் ஏ.ஐ. புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், ஊடகத்தினரை நாள்தோறும் சந்தித்து ஆட்சிக்கு எதிரான கருத்துகளையும், அதிமுக தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்து வந்தார்.
தற்போது 2026 தேர்தலிலும் ஜெயக்குமார் வெற்றிவாய்ப்பை தவறவிட்டார். அதன்பின்னர் அதிமுகவில் நிலவிய அணிப் பூசலின் போது ஜெயக்குமார் எந்தத் தரப்புக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ எந்தக் கருத்தும் சொல்லாததோடு ஊடகங்களையும் சந்திக்காத நிலையில் தற்போது மீண்டும் வெளியில் வந்துள்ளார்.
