அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 பிஃபா உலகக் கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற 35-ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. ‘F’ பிரிவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டம் தொடங்கியது முதலே நெதர்லாந்து வீரர்கள் சுவீடன் அணியின் தடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்து அடுத்தடுத்து கோல்களை விளாசினர். ஆட்டத்தின் 5, 17-வது நிமிடங்களில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 47, 54-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணியின் காக்போ 2 கோல்கள் அடித்தார்.
நெதர்லாந்தின் பலமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சுவீடன் அணி 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை அந்த அணியின் வீரர் எலங்கா அடித்தார். கடைசி கட்டத்தில் 89-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி மொத்தம் 5 கோல்களை அடித்து அசத்தியது.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் ‘F’ பிரிவின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.
