கடந்த சில தசாப்தங்களாகவே உலக நாடுகள் சந்தித்து வரும் பருவநிலை மாற்றம் (Climate Change) என்பது மனிதர்களை நேரடியாக வதைக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
மெக்சிகோ, கென்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஒருபுறம் தவிக்க, மறுபுறம் இந்திய மாநிலங்களும் இதுவரை கண்டிராத வெப்பத்தின் பிடியில் சிக்கித் திணறி வருகின்றன.
கொளுத்தும் வட இந்தியாவும், சென்னையில் அதிகரித்த வெப்பமும்
உலகளாவிய வெப்ப அழுத்தத்தின் அச்சுறுத்தல் நமக்கு மிக அருகிலேயே, நம் இந்திய மாநிலங்களிலேயே மிகத் தீவிரமாகக் கால்பதித்துள்ளது. சமீப காலமாக வட இந்திய மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை வெயில் கொடுமையின் உச்சத்தை எதிர்கொண்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்கா நகரில் வெயில் 48.2°C-ஐத் தொட்டு உலகிலேயே மிக வெப்பமான இடமாக மாறியது. அது மட்டுமன்றி, உலகின் மிக வெப்பமான 50 நகரங்களின் பட்டியலில் 26 நகரங்கள் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே பதிவாகிப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
மறுபுறம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஜூன் மாதத்தில் மழையும் வெப்பமும் மாறி மாறி கண்ணாமூச்சி காட்டி வருகின்றன. அவ்வப்போது வங்கக் கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்கக் காற்று மேகமூட்டத்தையும், லேசான இடியுடன் கூடிய மழையையும் தந்து தற்காலிகக் குளிர்ச்சியைத் தந்தாலும், அடுத்த சில மணி நேரங்களிலேயே வெயிலும், 75 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதமும் இணைந்து ஒட்டுமொத்த நகரத்தையும் ஒரு ‘பிரஷர் குக்கர்’ போல மாற்றி, மக்களைக் கடுமையான உஷ்ணத்திலும் வியர்வையிலும் வதைத்து வருகிறது.
மும்பையில் லேட் என்ட்ரி கொடுத்த பருவமழை
இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில், வழக்கமாக தென்மேற்குப் பருவமழையானது ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே (ஜூன் 10 வாக்கில்) தன் ஆட்டத்தைத் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் பருவமழை வராமல் போக்கு காட்டியது.
பருவமழைக் காற்று பலவீனமடைந்ததால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடலோரப் பகுதிகளில் மந்தநிலை நீடித்தது. இதன் விளைவாக, மும்பை மாநகரம் வறண்ட வானிலையுடனும், அசாத்தியமான உஷ்ணத்துடனும் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான வறண்ட ஜூன் தொடக்கத்தைச் சந்தித்தது.

ஏரிகளின் நீர்மட்டமும் அபாயகரமாகக் குறைந்த பின், இன்றுதான் ( ஜூன் 23) மும்பை மற்றும் கொங்கன் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய தீவிரப் பருவமழை பெய்யத் தொடங்கி, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாமதமான வருகையும் இடைப்பட்ட அதீத வெப்பமும் பருவநிலை மாற்றத்தின் நேரடி சாட்சியாகும்.
கேரளாவில் தாமதித்த பருவமழையும் எல் நினோவின் நிழலும்
இந்தியாவிற்குப் பருவமழையைக் கொண்டு வரும் நுழைவாயிலாகக் கருதப்படும் கேரளாவிலும் இந்த ஆண்டு சூழல் சற்றே கவலைக்கிடமாகவே தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதியே தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை, இந்த முறை ஜூன் 4 அன்று தான் கேரளாவுக்குள் நுழைந்தது. தீவிரத் தொடக்கத்திற்குப் பின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகி வரும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) அச்சுறுத்தல் காரணமாக கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் (IMD) எச்சரித்துள்ளது.
மழைக்காலத்திலும் வெயில் தகிப்பதும், திடீரென மேகவெடிப்புப் போலக் கொட்டித் தீர்ப்பதும் எனப் பச்சைக் கேரளா இன்று தட்பவெப்பச் சமநிலையை இழந்து தவித்து வருகிறது.
‘வெப்ப அழுத்தம்‘ மனித உடலை எப்படி வதைக்கிறது?
பொதுவாக நாம் பார்க்கும் வானிலை அறிக்கைகளில் உள்ள வெப்பநிலையை விட, மனித உடல் உணரும் வெப்பநிலை (Feels-like Temperature) என்பது முற்றிலும் மாறுபட்டது. விஞ்ஞானிகள் மனித உடலில் சுற்றுப்புறச் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிட ‘யுனிவர்சல் தெர்மல் க்ளைமேட் இன்டெக்ஸ்’ (UTCI) என்ற குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். இது வெறும் வெப்பநிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், காற்றின் ஈரப்பதம் (Humidity) மற்றும் காற்றின் வேகத்தையும் உள்ளடக்கியது.

அதிகப்படியான வெப்பமும் ஈரப்பதமும் இணையும் போது அது மனிதர்களுக்குப் பேராபத்தாய் முடிகிறது. மனித உடல் தன்னைத் குளிர்வித்துக் கொள்ளப் பயன்படுத்தும் இயற்கையான அமைப்பு தான் ‘வியர்வை’. ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது (சென்னையிலும் மும்பையிலும் நடப்பது போல), வியர்வை எளிதில் ஆவியாவதில்லை.
இதனால் வறண்ட வெப்ப அலையை விட, ஈரப்பதம் மிக்க வெப்ப அலைகள் (Humid Heat Waves) மனித உடலை மிக வேகமாகப் பாதித்து, மாரடைப்பு மற்றும் வெப்பத் தளர்ச்சியை (Heat Exhaustion) ஏற்படுத்திக் கொன்று விடுகின்றன என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
இரவுகளிலும் தணியாத தகிப்பு
இது தொடர்பாக சூழலியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மிக அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு என்னவென்றால், பகல் நேர வெப்பத்தை விட இரவு நேர வெப்பநிலை உலகெங்கும் மிக வேகமாக உயர்ந்து வருவதுதான். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 20°C-க்கு கீழே குறையாமல் ‘வெப்பமண்டல இரவுகளாக’ (Tropical Nights) நீடிப்பதால், மனித உடல்கள் பகல் நேர வெப்ப பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. ராஜஸ்தானின் அல்வாரில் இரவு வெப்பநிலை 37°C-ஐத் தொட்டு 55 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தது இதற்குச் சான்றாகும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை
ஆய்வின்படி, 1970-களுடன் ஒப்பிடும்போது உலகின் பல பகுதிகள் ஆண்டுக்கு 50 நாட்கள் வரை கூடுதல் கடுமையான வெப்ப அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவின் நமீபியா, அங்கோலா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா, தான்சானியா போன்ற நாடுகளுடன், மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் கோடைகால வெப்ப அழுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது.
தெற்கு ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் 1970-களை விட தற்போது 40 நாட்கள் வரை கூடுதல் வெப்ப அழுத்த நாட்களைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த தெற்கு ஐரோப்பாவும் கிட்டத்தட்ட ஒரு மாத கால கூடுதல் வெப்பத் தகிப்பை அனுபவிக்கிறது.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் 15-க்கும் மேற்பட்ட நாட்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தைச் சந்திக்கும் வேளையில், டெக்சாஸ் மற்றும் புளோரிடா போன்ற தெற்கு மாகாணங்கள் 25 நாட்களுக்கும் மேலாக மிகக் கடுமையான வெப்பப் பிடியில் சிக்கியுள்ளன.
இன்று உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனிதர்கள் ஆண்டுக்குக் குறைந்தது ஒரு நாளாவது அதீத வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உலக நாடுகள் புதைபடிவ எரிபொருட்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் அளவில் மனிதர்களைத் தற்காத்துக் கொள்ளும் ‘வெப்ப சுகாதாரச் செயல் திட்டங்களை’ (Heat Health Action Plans) உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.
– பா. முகிலன்
