குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 29-ம் தேதி முடிவடையும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி அன்று நடைபெறும். குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுத தகுதியுடையவர் ஆவர். வயது வரம்பு பொதுப்பிரிினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு (பொதுப்பிரிவு அனைத்து பிரிவினர்) வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு விவரங்களையும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதி பணிகள்
அடுத்தாக, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதி பணிகள்) அறிவிப்பு ஜூலை 7-ம் தேதியும், ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ பணிகள் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதியும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் உடைய பதவிகள்) அறிவிப்பு ஆகஸ்ட் 31-ம் தேதியும், ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 6-ம் தேதியும் அடுத்தடுத்து வெளியிடப்பட உள்ளன.
