கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து கவிதை பதிவிட்டுள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பல முகங்களை கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் சினிமாவில் 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். 6000க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 232 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் கவியரசு கண்ணதாசன்.
சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், 1969ஆம் ஆண்டு வெளியான குழந்தைக்காக படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார் கண்ணதாசன். இன்று கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் கண்ணதாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில்,
கவியரசே!
பிறப்பு முதல் இறப்பு வரை
தமிழர் வாழ்வைத்
தழுவிநடக்கிறது உன்தமிழ்
கீற்றுக் கொட்டகைக்கு
கிரீடம் சூட்டியது உன்பாடல்
பாமரர் நாவில்
பழமொழியானது உன்பல்லவி
மொழியின்
சகல செளகரியங்களையும்
பாட்டுக்குள் பரிமாறியவன் நீ
மதுவோ மதமோ
கீதையோ கோதையோ
நீ எதை எழுதினாலும்
உன் தமிழுக்கு மயங்கியது
தமிழச்சாதி
எறும்புத்தோலை உரித்துப்பார்த்து
யானை கண்டவன்;
இதயத்தோலை உரித்துப்பார்த்து
ஞானம் கண்டவன்
கலவியைத்
“துன்பம் போன்ற
இன்பம்” என்றவன்
தன்னைக்
“கண்ணீர் வரைந்த ஓவியம்”
என்றவன்
பாவேந்தரைத் தொடர்ந்து
திரையில் கவிதைசெய்த
பெருங்கவிஞன்
கடந்த நூற்றாண்டில்
கால்நூற்றாண்டின்
கையொப்பம் நீயல்லவா?
உன் கைத்தமிழைவிட
கானத் தமிழுக்கு
ஆயுள் அதிகம்
கண்ணின் மணிபோல
மணியின் நிழல்போலக்
கவிதை படைத்தாய் அய்யா!
இந்த மண்ணும்
கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதய்யா
உன் தமிழைப்
பிரிக்க முடியாதய்யா
உன் நூற்றாண்டை
இன்று தொடங்குகிறாய்;
நாங்கள் நிறைவுசெய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
